RSS
Write some words about you and your blog here

என்று தணியும் இந்த அடிமையின் மோகம்


‘உலகில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக யாரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. வீட்டு வேலைக்காரி என்ற பெயரில் பெண்கள் அடிமைகள் போல் நடத்தப்படும் அவலம் நீடிக்கும் வரை’’ & உலகின் உயர் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை ஆதங்கத்தோடு சொன்ன கருத்து இது. பெண்ணின் சிறப்பைச் சொல்ல எத்தனையோ பொன்மொழிகள். அத்தனைக்கும் ஆயுள் உண்டு. ஆனால், அடிமைகளை விட கொடுமையாய், வீட்டு வேலை என்ற பெயரில் சிறைபட்டு கிடக்கும் பெண்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாக வளைந்து நிற்கிறது. இந்திய மக்கள் தொகையில் 3 கோடி பெண்கள் அடுத்தவர் வீடுகளில் வேலைக்காரர்களாக வலம் வருகிறார்கள். அதில் தமிழகப் பெண்கள் 18&20 லட்சம். தலைநகர் சென்னையில் 8 லட்சம் என்பது தற்போதைய தகவல்கள். ஆனால், எந்த அமைப்பிலும் இல்லாமல், அப்படியொரு இடம் இருப்பதே தெரியாமல் பழைய சோற்றுக்கும், பழைய துணிமணிக்கும் பல ஊர்களில், பல வீடுகளில் பெண்கள் வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை
அதிகமாகலாம். அவலம் மாறுமா?
‘‘வீட்டு வேலை செய்வோர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த அடிமைத்தனம் இங்குமட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது. வீடுகளில் வேலை பார்க்கும் பெண்களை மட்டுமல்ல; ஆண்களையும் அடிப்பதும் உதைப்பதும் நடக்கிறது. வெளியேற முடியாமல் சிறை வைப்பது, பிறரிடம் பேசுவதற்கு அனுமதி மறுப்பது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பாலியல் தொந்தரவு போன்ற உடல்ரீதியான பாதிப்புகளுக்கு பெண்கள் இலக்காகின்றனர்’’ என்று ஐ.நா. சிறப்பு அதிகாரி குல்னரா சாகினியான் கூறியிருக்கிறார்.

வீட்டு வேலை செய்யும் பெண்கள் எந்த ஒரு சிறிய விஷயத்திற்கும் எஜமானவர்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம். குடும்ப வறுமை, கடன் சுமை, வேலை போய் விடுமோ என்ற பயம் போன்ற காரணங்களால், இப்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை வெளியில் கூறுவதில்லை. பெரும்பாலும் இவர்கள் வெளியூர்களில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வாழ வழி தேடி வந்தவர்கள். எனவே வாயிருந்தும் ஊமைகளாக வாழக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு தரப்பு பெண்களின் வேதனை வேறு விதமானது. வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைமைதான் அது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகபட்ச கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்பதும் ஐ.நா.வின் கவலைகளில் ஒன்று. மொழி தெரியாது, வெளிநாட்டு சட்ட திட்டங்கள் புரியாது. இந்த காரணங்களால் படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. பாஸ்போர்ட்களை எஜமானர்கள் கைப்பற்றி வைத்துக் கெள்வதால், அவர்களால் நாடு திரும்ப முடியாத பரிதாப நிலைமையிலும் சிக்கி தவிக்கின்றனர்.


படித்ததும், படிக்காததும்...

வீட்டு வேலை செய்பவர்கள் படிக்காதவர்களாக இருந்தால், நன்றாக வேலை வாங்க முடியும். எதிர்த்து பேச மாட்டார்கள், மரியாதை எதிர்பார்க்க மாட்டார்கள், சொல்வதை அப்படியே செய்வார்கள் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. அதிகம் படித்த, சம்பாதிக்கும் தம்பதிகள், தங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். காரணம் படித்தவர்களாக இருந்தால், குழந்தைகள் பராமரிப்புக்கு உதவும் என்று நினைக்கின்றனர்.

ஒன்றா... இரண்டா...

வீடுகளில் வேலை பார்க்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. நிறைய சம்பவங்கள் அதற்கு உதாரணங்கள். அவற்றில் சில...
ஈரோட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சார்பில் நடத்தப்படும் இல்லத்தில் இருந்து ஒரு பெண், டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடந்த பாலியல் தொந்தரவில் அப்பெண் தாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து அனாதையாக்கி விட்டனர் அக்குடும்பத்தினர்.
சேலத்தில் நடந்த கொடுமை இது. 12 வயது சிறுமி மீது திருட்டு புகார். 20 பவுன் நகையை திருடியதாக அடித்து உதைத்தனர். அதில் அச்சிறுமி பரிதாபமாக இறந்து போனாள். ஆனால், உண்மையில் திருடியது அந்த வீட்டு உறவினர்.
மதுரையிலும் இதேபோன்ற ஒரு சம்பவம். வீட்டு வேலை பார்த்த பெண்ணையும், அவரது மகனையும் திருட்டுப் புகாரில் போலீஸ் இழுத்துச் சென்றது. திருட்டை ஒப்புக்கொள்ள சொல்லி கடுமையாக தாக்கினர். விரல் நகங்களை பிடுங்கி ரத்தம் சொட்ட சொட்ட விசாரணை நடத்தினர். கடைசியில் நிரபராதிகள் என்பது தெரிந்தது.
வறுமையில் வாடிய ஒரு பெண்மணியின் 8 வயது சிறுமியை வளர்ப்பதாக கூறி அழைத்து வந்தனர். 3ம் வகுப்பு படிக்க வேண்டிய அக்குழந்தையை வீட்டு வேலையில் ஈடுபடுத்தினர். ஆனால், நரபலி கொடுக்க அக்குழந்தையை அழைத்து வந்த விஷயம் தெரிந்ததும் போடி நகரமே ஆடிப்போனது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்த கொடுமை. கேரளாவிலும் அதிகம். ஒரு வீட்டில் வேலை பாத்த 12 வயது சிறுமி, டிவி பார்த்தால் என்பதற்காக எஜமானி அம்மாவால் தண்டிக்கப்பட்டாள். எப்படி? கொதிக்கும் தண்ணீரை முகத்தில் ஊற்றி...
கேரளாவுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் தமிழக குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 700&800 குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற கணக்கெடுப்பை தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் நடத்தியது. கடந்த 2005ம் ஆண்டு கணக்குப்படி மொத்தம் 18 லட்சத்து 29 ஆயிரம் பேர் உள்ளனர்.
மாவட்டவாரியாக...
கன்னியாகுமரி 50,000
திருநெல்வேலி 1,10,000
தூத்துக்குடி 60,000
மதுரை 1,25,000
விருதுநகர் 35,000
ராமநாதபுரம் 30,000
சிவகங்கை 15,000
தேனி 25,000
திண்டுக்கல் 70,000
திருச்சி 1,10,000
தஞ்சாவூர் 30,000
புதுக்கோட்டை 32,000
சேலம் 70,000
கிருஷ்ணகிரி 43,000
விழுப்புரம் 42,000
வேலூர் 50,000
சென்னை 6,60,000
பெரம்பலூர் 25,000
ஈரோடு 30,000
கோவை 70,000
திருவள்ளூர் 25,000
காஞ்சிபுரம் 65,000
நாமக்கல் 25,000
திருப்பூர் 20,000
நாகை 15,000
திருவாரூர் 15,000
கரூர் 17,000

இது 5 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கு. இப்போது, அதுவும் பொருளாதார மந்தநிலையால் கட்டிடத் தொழில் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்ட பின்னர், வீட்டு வேலை செய்யும் பெண்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.


ஒரு மணி நேரத்திற்கு ரூ.30


வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடின. அதன் பலனாக முதலில் 1999ல் தமிழ்நாடு உடல் உழைப்போர் நலச் சட்டத்தில் வீட்டு வேலையும் சேர்க்கப்பட்டது. 2005ல் சங்கம் அமைக்க சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்தது. 2007ல் தனி நலவாரியம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது அமலுக்கு வரும்போது வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 கூலி கிடைக்கும். தினசரி சம்பளம் என்றால் ரூ.200.

முக்கால்வாசி
பெண்கள்

வீட்டு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிவரங்கள் விதவிதமான கணக்குகளை தெரிவிக்கின்றனர். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்கள்தான் அதிகளவில் வீட்டு வேலை செய்பவர்களாக இருந்துள்ளனர். இப்போது வீட்டு வேலை செய்பவர்களில் 78 சதவீதம் பேர் நகர்புறத்தைச் சேர்ந்த பெண்கள். இவர்கள் நகர்புறத்தில் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். நாடு முழுவதும் நடைபெறும் நகரமயமாக்கல் நடவடிக்கைகளால் முதலில் பாதிக்கப்படுவது வீட்டு வேலை செய்யும் பெண்கள்தான்.

நாய் பிஸ்கட்டை தின்றதால்...


தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கிளாரா கூறியதாவது:
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னமும் மாதம் 75 ரூபாய்க்கு வீட்டு வேலை செய்கின்றனர். மதுரையில் 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு கொத்தடிமை போல் வேலை செய்கிறார்கள். ராமநாதபுரம் அருகே தோத்தூரணி என்ற பகுதியில் 350 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் எல்லாருக்குமே வீட்டு வேலை தான் முக்கியத் தொழில். தூத்துக்குடியில் பசி காரணமாக, நாய் பிஸ்கட்டை தின்று விட்டதாக கூறி, வீட்டில் வேலை பார்த்த மூன்று பேரை வேலையை விட்டே நீக்கி விட்டனர்.
தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும்போது வீடுகளில் வேலை பார்ப்பவர்களை ஏதாவது பழி சுமத்தி அனுப்பி விடுவார்கள். போனஸ் கேட்பார்கள் என்பதற்காக இப்படி செய்கின்றனர். சில வீடுகளில் பழைய சேலையில், தையல் போடப்பட்டுள்ள ஓரத்தை வெட்டி விட்டு, புது துணியாக கொடுக்கின்றனர்.
தீண்டாமை கொடுமையும் உண்டு. வேலைக்கார பெண்களுக்கென தனி தட்டு, டம்ளர் வைத்திருக்கிறார்கள்.
வீட்டு வேலை செய்பவர்களில் 80 சதவீதம் படிக்காதவர்கள். கணவர்கள் குடிகாரர்களாக இருப்பதாலும், நிறைய பிள்ளைகள் உள்ளதாலும், வறுமையில் சிக்கி வேலைக்கு வருகிறார்கள். சுடச்சுட சமையலுக்கு உதவினாலும், அவர்களுக்கு கிடைப்பது பழைய சோறும், ஊசிப் போன குழம்பும் தான்.
சாப்பாடு விஷயத்தில் சில பேர் மிகவும் கொடுமையாக நடப்பார்கள். பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல வேலை ஆட்களை அனுப்புவார்கள். அந்த குழந்தை சாப்பிடாமல் மீதி வைத்து விடும். அதைக் கூட அந்த பெண் சாப்பிடக் கூடாதாம். அதனால், மீதி உணவில் மண்ணை அள்ளிப் போட்டு விடும்படி குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறார்கள். சாதிக் கொடுமை தான் இதற்கு காரணம் என்றார்.


ரகசிய வீட்டுக்காரராக ஆசை


வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் கொடுமைக்கு கொஞ்சமும் குறைவில்லை. வறுமையில் இருப்பவர்களை பணம், பொருள் கொடுத்து மடக்கி விடலாம் என்று சில வீட்டுக்காரர்கள் நினைக்கிறார்கள். வறுமை, மிரட்டல் காரணமாக சிலர் படிகிறார்கள். மறுப்பவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி விரட்டுவதும் நடக்கிறது.
வழிக்கு வருகிற பெண்களின் ரகசிய வீட்டுக்காரர்களாக துடிப்பவர்களில் அரசியல்வாதிகளும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு சென்னை முழுவதும் சுவரொட்டி ஒன்று பளிச்சிட்டது. உயரம் மிகவும் குறைவு என்பதால், வீட்டு வேலைக்கு சென்றார் ஒரு பெண். அது அரசியல்வாதி வீடு. குள்ளப் பெண் என்றும் பாராமல் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டார். கட்டிக்கொள்கிறேன் என்று கூறி 2 முறை கலைக்கவும் வைத்தார். கடைசியில் பிரச்னை வெடித்த போது அந்தப் பெண் அவமானப்பட்டதுதான் மிச்சம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்த அரசியல்வாதியின் செல்வாக்குதான் வெற்றிப்பெற்றது.

இதிலுமா சாதி?

சிலர், வீட்டு வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதிலும் சமையல் செய்வதாக இருந்தால், சாதி தான் வேலையை உறுதி செய்கிறது. ஊதிய விஷயத்திலும் சாதி பார்ப்பது இன்றைய நாகரீக உலகில் இன்னொரு ஆச்சர்யம். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களை தங்கள் வீட்டு வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ள தயங்குபவர்கள், அவர்கள் மதம் மாறியிருந்தால் சாதியை கண்டுக்கொள்வதில்லை. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் கீதா கூறுகையில், ‘‘வீட்டு வேலை பார்ப்பவர்கள் மூன்று வகை. பகுதி நேரமாக பார்ப்பவர்கள், முழுநேரமாக பார்ப்பவர்கள், கொத்தடிமைகளாக இருப்பவர்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் தலித் பெண்கள். 10% பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இளம்பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் தான் இந்த வேலைக்கு வருகின்றனர்,’’ என்றார்.

0 comments:

Post a Comment