RSS
Write some words about you and your blog here

கருத்து சுதந்திரத்திற்க்கு கிடைத்த வெற்றி




குஷ்புவுக்கு மட்டுமல்ல. கருத்துச் சுதந்திரத்தைப் போற்றும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் நீதி கிடைத்திருக்கிறது. திருமணம் செய்தோ செய்யாமலோ சேர்ந்து வாழ்வது அவரவர் விருப்பம். ஆனால் உடலுறவு கொள்ளும் எல்லாரும் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள் என்பதுதான் குஷ்பு ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்த கருத்தின் சாராம்சம்.



இந்தக் கருத்தைத் தொடர்ந்து பல விதமாகத் திரித்தும் குஷ்பு அடுத்தடுத்து சொன்னவற்றையும் திரித்தும் அவ்ருக்கெதிராக தமிழ்க் கலாசாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே தமிழ் மக்கள் மீது திணித்துக் கொண்ட சில சந்தர்ப்பவாதிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். தமிழ் நாட்டின் வெவ்வேறு ஊர்களில் மொத்தமாக குஷ்பு மீது 23 வழக்குகளைத் தொடுத்தார்கள்.



இந்த அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கும் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக் வர்மா, பி.எஸ் சௌஹான் ஆகியோர் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் - சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்வது கிரிமினல் குற்றமாகாது. குஷ்பு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பற்றி சொன்னவை சர்ச்சையை ஏற்படுத்தலாம். அந்தக் கருத்தை ஏற்காதவர்கள் அநேகர் இருக்கலாம். ஏற்கிறவர்களும் இருக்கிறார்கள். திருமணம், குடும்பம், ஒழுக்கம் பற்றிய கருத்துகள் நிலையானவை அல்ல.மாறக்கூடியவை. நபருக்கு நபர் வேறுபடக் கூடியவை. ஆனால் கருத்துகளைச் சொல்வது குற்றமாகாது. அதற்கான கருத்துச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு.



இந்தியா டுடே தமிழ் இதழின் செக்ஸ் பழக்கங்கள் பற்றிய சர்வே சிறப்பிதழுக்கு அளித்த பேட்டியில் குஷ்பு சொன்னது என்ன ?



“ என்னைப் பொறுத்த வரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல. அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய் பிரெண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை...ஒரு பெண் தன் பாய் பிரெண்டைப் பற்றி உறுதியாக் இருக்கும்போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே வெளியே போகலாம்... நான் காதலித்த நபரைத் திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம்.. ” என்பதுதான் குஷ்பு சொன்னவை. யாரானாலும் பாதுகாப்பான செக்ஸ் அவசியம் என்பதுதான் குஷ்பு மேற்கொண்டு வலியுறுத்திய கருத்து. இப்போதெல்லாம் படித்த ஆண்கள் யாரும் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண் இதற்கு முன்பு உறவில் ஈடுபடாத வர்ஜினாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பது குஷ்புவின் இன்னொரு கருத்து.



இதுபற்றி தினந்தந்தி கேட்ட கேள்விக்கு, “இன்றைக்கு திருமணத்துக்கு முன்னால் உறவு வைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று குஷ்பு சொன்னார்.



இந்தக் கருத்துகள் திரிக்கப்பட்டன. .



ஐந்து வருடங்களுக்கு முன்னால் குஷ்புவுக்கு எதிராகவும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகவும் நடந்த அராஜகங்களை நினைவுபடுத்திக் கொள்வது நம் எல்லாருக்கும் நல்லது. ஏனென்றால் நம் சமூகத்தின் மீதே செலக்டிவ் அம்னீஷியா என்ற நோய்க் கிருமியைத் திணிப்பது பொது வாழ்க்கையில் அரசியலில் இருப்பவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு.



அப்போது குஷ்புவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் சன் டி.வி, தமிழ் முரசு ஏடு, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான், தங்கர் பச்சான்,பழ. கருப்பையா முதலானோர்.



ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு பல பேருடன் உறவு வைக்கலாம் என்று குஷ்பு சொல்லியதாகப் பொய்யாக எழுதிக் கண்டித்தார் பழ. கருப்பையா. சன்.டி.வியும் தமிழ் முரசும் குஷ்புவுக்கு எதிராக ராமதாஸ், திருமாவளவன் கட்சியினர் நடத்திய போராட்டங்களைப் பிரும்மாண்டமாக ஆக்கிக் காட்டி தொடர்பிரசாரம் செய்தன.



குஷ்பு வீட்டுக்கு திருமாவளவன் கட்சியினர் கழுதை ஊர்வலம் நடத்தினார்கள். நடிகர் சங்கத்தின் முன் ஆர்ப்பாட்டம் என்று சொல்லி துடைப்பக் கட்டைகளை சிலர் வீசினார்கள். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் கூட சாதுர்மாஸ்ய விரதத்தின்போது கோர்ட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்னால் ஒப்புக் கொள்கிற உள்ளூர் கோர்ட்டுகள், குஷ்புவுக்கு பிடி வாரண்ட் அனுப்பின.



நடந்ததெல்லாம் தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்று சப்பைக்கட்டு கட்டினார் திருமாவளவன். நாங்கள் நேரடியாக இறங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா என்று ராமதாசும் திருமாவளவனும் கேட்டார்கள்.



தன்னெழுச்சியாகப் போராடுகிறவர்களுக்கு எங்கிருந்து கழுதைகளைத் திரட்டிக் கொண்டு வருவது என்றெல்லாம் தெரியுமா என்ன ? கழுதையும் துடைப்பக்கட்டையும் சலவை தொழிலாளர்களும் துப்புரவுத்தொழிலாளர்களும் உபயோகிப்பவை. இவற்றை ஒருவரை இழிவுபடுத்துவதற்கான குறியீடுகளாகப் பயன்படுத்துவது உண்மையில் அந்தத் தொழில்களையும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்துவதேயாகும். மேலவளவில் தலித்தைக் கொலை செய்தவர் வீட்டுக்கோ திண்னியத்தில் தலித் வாயில் மலம் திணித்தவர் வீட்டுக்கோ போய் ஆர்ப்பாட்டம் நடத்தாத தலித் காவலர்கள் குஷ்பு வீட்டுக்குப் போனார்கள். இவர்கள் யாரும் குஷ்பு பேட்டியை வெளியிட்ட பத்திரிகை வாசலுக்குப் போகவில்லை.



குஷ்பு பேச்சால் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்ன தங்கர் பச்சான் தனக்கு முன்னர் நேர்ந்த அவமானம் இப்போது எல்லா தமிழர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது என்றார். இவருக்கு ஏற்பட்ட அவமானம் என்ன ? ஒரு நடிகையுடனும் சிகை அலங்கரிப்பாளருடனும் சமபளம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காசுக்கு வேலை செய்யும் நடிகையும் விபசாரம்தான் செய்கிறார் என்று பொருள்பட சொன்னதற்கு நடிகைகள் குஷ்பு சுஹாசினி எல்லாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர் மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது. இதைத்தான் அவமானம் என்றார்.



குஷ்புவைத் தமிழ் நாட்டை விட்டு வெளியே போ என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கண்டித்துவிட்டு தமிழர்கள் சார்பாக குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட சுஹாசினியை அவர் தமிழச்சியே அல்ல, கைபர் கணவாய் வழியே வந்தவர் என்ற கருத்தை உதிர்த்தார் சீமான். இவர் அப்போது அதே கணவாய் வழியே வந்த மாதவனைத் தன் படங்களில் நடிக்க வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்ததை செலக்டிவ் அம்னீஷியாவில் தமிழர்கள் மறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான்.



குஷ்புவை தாங்கள் முஸ்லிமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். குஷ்புவுக்கு நிகராக பாலியல் விஷயங்களில் கருத்து தெரிவிக்கும் படைப்பாளி கவிஞர் சல்மா முஸ்லிமா இல்லையா என்று அக்மார்க் முத்திரை எதையும் த.மு.மு.க அறிவிக்கவில்லை. நடிகர் சங்கத்திலிருந்து சரத் குமார் சுஹாசினியிடம் விளக்கம் கேட்கப் போவதாக அறிவித்தார்.



ஊர் ஊராக வழக்கு தொடுத்து குஷ்புவை தமிழ் கலாசாரக் காவலர்கள் எல்லாரும் அலைக்கழித்துக் கொண்டிருந்தபோது குஷ்புவை வைத்து நிகழ்ச்சி நடத்தி காசு பார்த்த ஜெயா டி.வி வாயைத் திறக்கவில்லை. அ.தி.மு.க கட்சியும் வாய் திறக்கவில்லை.இப்போது குஷ்புவைத் தங்கள் டி.விகளில் பயன்படுத்திவரும் தி.மு.க தலைமையும் அப்போது இந்தப் பிரச்சினையில் வாய் திறக்கவில்லை.



குஷ்பு சார்பாகவும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் அப்போது குரல் கொடுத்தவர்கள் யார் யாரென்றும் நாம் இப்போது நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். முதல் குரல்கள் என்னிடமிருந்தும் சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ்,, வழக்கறிஞர் ரஜினி, களப் பணியாளர் ஷெரீபா ஆகியோருடையவைதான். அ.மார்க்ஸ் எழுதிய துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த நீலகண்டன் திருமாவின் ஆதரவாளர்கள் தாக்குதலுக்குள்ளானார்.



அடுத்தடுத்து பேராசிரியை சரஸ்வதி, சாரு நிவேதிதா, லீனாமணிமேகலை, பிரீதம் சக்ரவர்த்தி, ஆனந்த் நடராஜன், வாஸந்தி, மாலன்,கனிமொழி, ப.சிதம்பரம், சோ ஆகியோர் ஆதரித்தார்கள். பின்னர் ஜனநாயக மாதர் சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தலித் முரசு இதழ் முதலியோர் வந்தார்கள். ஒவ்வொருவரின் ஆதரவும் வெவ்வேறு அளவிலானது என்றபோதும் அத்தனை பேரும் குஷ்புவின் கருத்துச் சுதந்திர உரிமையை ஆதரித்தார்கள்.



இப்போது உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு சொல்லிவிட்டது. ‘‘ பாதுகாப்பான உடலுறவு பற்றி பகிரங்கமாக விவாதியுங்கள். நமது இளைஞர்கள் எய்ட்சுக்கு பலியாகாமல் காப்பாற்ற இந்த பகிரங்கமான கருத்துப் பரிமாற்றம் தேவை’’ என்று டிசம்பர் 1,2005 எய்ட்ஸ் தினத்தன்று அப்போதைய அமைச்சர் அன்புமணியை அருகில் வைத்துக் கொண்டு தேசத்துக்கு விடுத்த வேண்டுகோளைத்தான் இப்போது உச்ச நீதி மன்றமும் இன்னொரு வடிவில் உறுதி செய்கிறது.



ஆனால் ராமதாஸ், திருமாவளவன், சன் டிவி, தமிழ் முரசு ஏடு,பழ. கருப்பையா, சீமான், தங்கர் பச்சான்,சரத் குமார், த.மு.மு.க,தி.மு.க, அ.தி.மு.க எல்லாரும் உரத்த மௌனத்தில் இருக்கிறார்கள்.



கருத்துச் சுதந்திரம் பற்றிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா ? இல்லையா ? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால், உங்கள் கடந்த கால அராஜகங்களுக்காக குஷ்புவிடமும், சுஹாசினியிடமும், அவர்களை ஆதரித்த எங்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்.



நீதி மன்றத் தீர்ப்பை ஏற்கவில்லையேன்றால் அதையாவது சொல்லித் தொலையுங்கள். உங்கள் அசல் முகங்களை நாடு தெரிந்துகொள்ளட்டும்.

0 comments:

Post a Comment