இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுக்கப் போவது தண்ணீர் பிரச்னை தான். இந்த தண்ணீர் பிரச்னையை சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்று, கடந்த பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டிற்கு, 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 56 கோடி ரூபாயில் திட்டம் அமைக்கலாமா என்ற தடுமாற்றம் ஏற்பட் டுள்ளது. என்றாலும் அடுத்த பத்தாண்டு களில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
நதிநீர் இணைப்பு திட்டத்தில், 30 நதிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இணைக்கப்படும். ஆயிரம் கி.மீ., நீளத்திற்கு கால்வாய்கள் அமைத்து, 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுக்க, 11 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்காக 400 புதிய நீர் நிலைகள் கட்டப் படும். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, எந்த இடத்தின் வழியாக கால்வாய் அமைத் தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது அறியப்பட வேண்டும். அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் மற்றும் குறைவான நீர் கிடைக்கும் இடங்கள் ஆகியவை குறித்து, அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், அடையாளம் காணப்பட்ட அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் குறித்து, ஒருமுகப்போக்கு இல்லை. உதாரணமாக, மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் அளவுக்கு அதிகமான நீர் உள்ளது என்று, மத்திய அரசு கூறிவரும் நிலையில், மாநில அரசுகளான ஒரிசா, ஆந்திரா ஆகியவை குறைவான நீர் தான் செல்கிறது என்று கூறி வருகின்றன. இதுகுறித்து வல்லுனர் களிடையே, விவாதம் நடந்து வருகிறது. ஆனால், நதிநீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து, முறையான ஒப்பந்தங்கள் இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. இதே கதைதான் மற்ற மாநிலங்களுக்கு இடையேயும் நடக்கிறது.
மத்திய அரசு பணியிலிருந்த இன்ஜினியர் கே.எல்.ராவ் என்பவர் தான், கடந்த 1972ம் ஆண்டு, முதன்முதலில் நதிநீர் இணைப்பு குறித்த யோசனை யை வெளியிட்டார். இதன்படி, கங்கை - காவிரி இணைப்பு கால்வாய் அமைக்கப் பட்டால், பாட்னா அருகே வெள்ளமாக பாயும் 60 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தென் மாநிலங் களின் 150 நாள் நீர் தேவையை சமாளிக்க உதவும் என்று கூறினார். ராவ் கூறிய கங்கை -காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு இணையான "கேர்லேண்ட் கெனால்ஸ்' என்ற திட்டத்தை கேப்டன் டாஸ்டர் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு பரிந் துரைத்தார். இதன்படி, இமயமலையில் பிறக்கும் நதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பிறக்கும் நதிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில், கால் வாய்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு தேசிய குழு அமைக்கப்பட்டு, கேப்டன் டாஸ்டர் கூறிய நதிநீர் இணைப்பு கால்வாய் அமைப்பதிலுள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டம் சாத்தியமற்றது என்று, பின்னர் நிராகரிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில், வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதை தடுக்க கால் வாய் அமைப்பதன் மூலம், ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாய்க்கும் வழி ஏற்படும். தொடர்ச்சியாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்காவிட்டால், அதனால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகமாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்க, தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதனால், இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளின் நீர் தேவையை எளிதாக சமாளிக்க முடியும். திட்டங்களை அமலாக்கும் போது தேவையான நிதி, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பக்கத்து மாநிலங்களுக்கு நீர் அளிக்க வழி கிடைக்கும்.
விவசாய பயன்பாடு அதிகமுள்ள குறிப்பாக, டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு நிலத்தடி நீர் பெருமளவில் உதவுகிறது. பாசனத்திற்கு தேவைப்படும் நீர், குழாய் கிணறு மூலம் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடிநீர் வளம் கிருஷ்ணராஜசாகர் அணையில் கொள்ளளவை விட, அதிகம் என்று யூ.என்.டி.பி., மதிப்பிட் டுள்ளது. ஆற்று சமவெளி பகுதியிலிருந்து, அதிக தொலைவிலுள்ள இடங்களில், நிலத் தடி நீர்வளமே குடிநீர் ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவதால், 10 முதல் 100 மீ வரை நீர் மட்டம் குறைந்து விடுகிறது. இதனால், இப்பகுதிகளில் 300 மீ ஆழம் வரை தண்ணீருக் காக கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது.
நகர்புறங்களில் தண்ணீர் மட்டம் குறைய, குறைய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவுடன் குழாய் கிணறு தோண்டப்படுவதால் நிலத்தடிநீர் மட்டம் அதாள பாதாளத் திற்கு செல்வதை தடுக்க முடிவதில்லை. இந்த செயல் தொடரும் போது, நிலத்தடி நீர் கிடைக்காமல் அந்த பகுதியே பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நதிநீர் இணைப்பு மூலம் நீர் பற்றாக்குறையுள்ள இடங் களில் நல்ல நீர் வளம் ஏற்படும். பாசன வசதி அதிகமாவதால், விவசாய நிலங்கள் செழிப் படையும். குடிநீர் பற்றாக்குறை என்பது எங்குமே இருக்காது. நிலத்தடி நீர் மட்டமும் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். பல்வேறு பயன்களை தரும் திட்டம் என்று அனைத்து மட்டத்திலும் அறிந்திருந் தாலும், அதை செயல்படுத்த தொடர்ந்து தயக்கம் காட்டப் பட்டு வருகிறது என்பது தான் உண்மையான நிலை. தேசிய அளவிலும், தென்னிந்திய அளவிலும் நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், மத்திய அரசு இதுவரை அந்த கோரிக்கையை கண்டு கொள்வதாக இல்லை.
இந்நிலையில், தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது, இப்போதைக்கு சாத்தியமல்ல என்பதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, தமிழகத் திலுள்ள நதிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து, ஏற் கனவே பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மேட்டூர் அணையின் கீழ் பகுதியில், கட்டளை அணை அருகில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து கால்வாய்கள் மூலம் வைகை, குண்டாறு, வைப்பாறு உள்ளிட்ட பல நதிகளை இணைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி, ஸ்ரீரங்கம்; புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆவுடையார் கோவில்; சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, இளையங்குடி, மானாமதுரை; ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவடானை, பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர்; விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, கரியாப்பட்டி, அருப்புக்கோட்டை; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திக் குளம் ஆகிய பகுதிகள் பயன் அடையும். தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தி னால், மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெற முடியும். மாநிலத்தை வறட்சியின் கோரப்பிடியிலிருந்து காக்க வேறு வழியில்லாமல், தமிழக அரசு இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில், வற்றாத ஜீவ நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென் னிந்திய நதிகளை, தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குன்றாமல் கிடைக்கும். நீர் வழிச் சாலை திட்டம்: மதுரையைச் சேர்ந்த பொறியாளர் காமராஜ் மற்றும் அவரின் குழுவினர் பல ஆண்டு ஆய்வுக்கு பின்னர் "கங்கை - குமரி தேசிய நீர் வழிச்சாலை திட்டம்' என்ற ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம், தென் மாநிலங்கள் கூடுதல் நீர் பெறுவதுடன், நீர் வழிப் போக்குவரத்தையும் பெற முடியும்.
திட்டத்தின் விவரம்: மூன்று நீர்வழிகளை கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு பிறகு ஒன்றாக இணைக்கப் படும்.
இமயமலை நீர்வழி: இது நான்காயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை -பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.
மத்திய நீர்வழி: இது ஐந்தாயிரத்து 750 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை, மகாநதி மற்றும் தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.
தென்னக நீர்வழி: இது நான்காயிரத்து 650 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும். இந்த நீர்வழிகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருக்கும். இந்த மூன்று நீர்வழிகளும் உரிய வழியில் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்படும். நீர் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் நீரை பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பணிகளை இந்த நீர்வழி செய்யும். இதன் ஆண்டு கொள்ளளவு, 15 ஆயிரம் டி.எம்.சி., ஆகும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பெரிய நதிகளை இத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் கிளை நதிகளை இணைத்தாலே போதும். இயற்கையான புவியமைப்பு பயன்படுத்தி, இந்த திட்டம் நிறைவேற்றப்படும். கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் மட்டுமே நீர்வழியில் கொண்டு வரப்படும். இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்.
நலம் பல தரும் நதி நீர் இணைப்பு
வெள்ளத்தடுப்பு: மழைக் காலங்களில் ஏற்படும் கட்டுப் படுத்த முடியாத வெள்ளத்தை, இந்த திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். நீர் குறைவாக உள்ள பகுதியை நோக்கி வெள்ளத்தை திருப்பி விடலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவை குறைக்கலாம். வெள்ளத் தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, வெள்ள நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாக குறையும்.
குடிநீர்: அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங் களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.
விவசாயம்: 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். இதனால் ஆண்டுக்கு, 50 கோடி டன் உணவு உற்பத்தியை பெற முடியும். ஏற்றுமதி பெருகி, அன்னிய செலாவணி ஈட்ட முடியும்.
மின்சாரம்: நீர் வழிகளில் நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம், 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதனால் இந்திய தொழில் உற்பத்தியை, 15 மடங்கு உயர்த்த முடியும். அனைத்து நீர்வழிகளிலும் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம், இடமாற்றத்திற்கான மின் இழப்பு குறையும்.
வேலை வாய்ப்பு: இத்திட்டத் திற்கான கட்டுமான பணியின் மூலம், வேலை வாய்ப்பு பெருகும். மேலும், கப்பல் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் விவசாயத்துறை ஆகியவை மூலம் வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.
தெலுங்கு கங்கை திட்டம் சிறந்த உதாரணம்: அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத் தில், ஒரு மலையில் ஓடும் நதியிலிருந்து, 720 கி.மீ., தொலைவி லுள்ள சமவெளிக்கு கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, விவசாயம் செய்யப்படுகிறது. துருக்கி நாட்டிலிருந்து சவுதி அரேபியாவிற்கு, கிட்டத்தட்ட 3 ஆயிரம் கி.மீ., தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் எடுத்து வரப்படுகிறது. இத் திட்டத்தால், தங்கள் நாட்டிற்கு பெரும் பாதிப்பு என்ற போதிலும், இஸ்ரேல், ஈராக் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தை அனுமதித்துள்ளன. இந்தியாவில், ஆந்திர அரசு செயல்படுத்தியுள்ள தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம், மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஓடும் கிருஷ்ணா நதியை, தென்பகுதியிலுள்ள வடபெண்ணை ஆற்றுடன் இணைக்கும் வகையில் கால் வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் வழிநெடுக ஒவ்வொன்றும், 10 முதல் 12 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட மூன்று செயற்கை ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குண்டூர், நெல் லூர் மற்றும் கடப்பா மாவட் டங்கள் நல்ல பாசன வசதியை பெற்றுள்ளன. மேலும், இத் திட்டத்தின் கீழ், சென்னை நகருக்கும் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், தேசிய நதிகளை இணைத்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்பதற்கு, தெலுங்கு கங்கை திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.
நீர் வள மேலாண்மை குறைவு: இன்றைய நிலையில், நாட்டின் பல கடைக்கோடி கிராமங் களில் வசிக்கும் மக்களுக்கு, சராசரியாக 2 லிட்டர் குடிநீர் கூட கிடைப்பதில்லை. ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் வசிக்கும் நபருக்கு சராசரியாக தினசரி 5,910 லிட்டர் நீர் கிடைக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப் பிடும் போது, இந்தியாவின் நீர்வளம் அவ்வளவு மோசமானதாக இல்லை. சர்வதேச அளவில், சமவெளி பகுதிகளில் சராசரியாக 70 செ.மீ., மழை பெய்கிறது. அதேவேளையில், இந்தியாவில் 117 செ.மீ., மழைபொழிவு உள்ளது. இந்த வகையில் ஆண்டுக்கு கிடைக்கும் 37 கோடி எக்டேர் மீட்டர் மழைநீர் நாட்டின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானது. ஆனால், போதுமான நீர்வள மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தினால், கிடைக்கும் மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்து, நாட்டில் நீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. நதிநீர் இணைப்பு திட்டத் தை செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மழைநீரில் பெரும் பகுதியை பயன் படுத்த முடியும்.
தூங்கும் நீர்வள நிறுவனம்: தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 1982ம் ஆண்டு, தேசிய நீர்வள நிறுவனம் துவக்கப்பட்டது. நதி நீர் இணைப்புக்கான திட்டங்களையும், வரைமுறைகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இந்த அமைப்பின் செயல்பாடு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மத்திய அரசு முழு அளவிலான நிதி உதவியை அளித்து வருகிறது. இந்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் தான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இதுநாள் வரை யார், யார் இதில் இடம் பெற்றுள்ளனர்; அவர்களின் பெயர் மற்றும் தகுதி குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும், மற்ற துறைகளை சார்ந்தவர்களோ, பொதுமக்களின் பிரதிநிதிகளோ யாரும் இந்த அமைப்பில் இதுவரை இடம் பெறவில்லை. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, இதுவரை எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை. குறிப்பாக, நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து தொழில் நுட்ப அறிக்கை தர வேண்டிய இந்த நிறுவனம் இதுவரை அது சம்பந்தமாக ஒரு அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அணைகளால் எப்பவுமே ஆபத்து தான்: சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில், உணவு பற்றாக் குறை அதிகமாக இருந்தது. விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காக, பல கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையும், விவசாய நிலமும் கொண்ட நாடுகளுக்கு அணைகள் ஒத்துவராது. நதிகளை இணைப்பதே சிறந்த முறையாகும் என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றும் கருதப்படுகிறது. பொதுவாக அணைகள் கட்டுவதால், புவியியல் ரீதியில் பெரும் பாதிப்புக்கள் உண்டாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு தான் ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அணைகள் கட்ட, சட்ட ரீதியான தடை விதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், புதிய அணைகளை கட்டுவதை காட்டிலும், வட மாநில நதிகளை, தென் இந்திய நதிகளோடு இணைப்பது ஒன்றே, இந்தியாவின் விவசாய மேம்பாட்டிற்கும், வெள்ள சேத தடுப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும் என்று நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.